தமிழ் மொழியை புறக்கணித்த நிறுவனத்திற்கு எதிராக முறைப்பாடு!

பொண்டேரா நிறுவனத்தின் எங்கர் வெண்ணெய் உற்பத்தியின் பொதியில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டமை தொடர்பில் வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள நுகர்வோர் அதிகார சபையின் அலுவலகத்தில் முறைப்பாடொன்று  பதிவு செய்யப்பட்டுள்ளது.

வுவனியா மாவட்ட ஊடகவியலாளர்களான பாஸ்கரன் கதீஷன் மற்றும் ராஜேந்திரன் சஜீவன் ஆகியோரினால்  இன்று வெள்ளிக்கிழமை மாலை இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2020 ஆகஸ்ட் மாதம் 12ம் திகதி, அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், உணவுப் பொருட்களின் சில்லறை விலை மற்றும் திகதி உள்ளிட்ட பல விடயங்கள்  சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில  ஆகிய மும்மொழிகளில்  குறிப்பிட வேண்டும் என முறைப்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

எவ்வாறாயினும் பொண்டேரா நிறுவனத்தின் எங்கர் வெண்ணெய் உற்பத்தியின் பொதியில்,  அரசின் வர்த்தமானி அறிவித்தலை மீறி சீனாவின் மண்டரின் மொழி உள்ளடக்கப்பட்டுள்ள போதிலும் தமிழ்  மொழி உள்ளடக்கப்படவில்லை என முறைப்பாட்டாளர்கள் தமது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை,  எங்கர் வெண்ணெய் உற்பத்தியின் பொதியில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டமை குறித்து சமூக வலைத்தளங்களில் பதிவுகள் வெளியாகியிருந்த நிலையில், அது தொடர்பில் நாம் நுகர்வோர் அதிகார சபையின் தகவல் பிரிவை தொடர்பு கொண்டு வினவினோம்.

எனினும், அந்த விடயம் தொடர்பில் இதுவரை தமக்கு  முறைப்பாடுகள் கிடைக்கப் பெறவில்லை எனவும், அது தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப் பெறும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கத் தயாராகவுள்ளதாகவும்  நுகர்வோர் அதிகார சபையின் தகவல் பிரிவு எமக்கு ஏற்கனவே குறிப்பிட்டிருந்ததது,

இந்த நிலையில், இந்த விடயம் குறித்து பொண்டேரா நிறுவனத்தின்  கருத்தினை அறிந்து கொள்ள நிறுவனத்தின்  அதிகாரிகளை எமதுசெய்திப் பிரிவு தொடர்பு கொண்டது.

எவ்வாறாயினும், இது தொடர்பில் பதில் வழங்குவதாக கூறிய அதிகாரிகள்  இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை எவ்வித பதிலையும் வழங்க முன்வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *